Skip to main content

'பி.எம். கேர்ஸ்' கணக்கு சர்ச்சை!!! மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவு...

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

delhi court orders to government to reply on pm cares issue

 

பி.எம். கேர்ஸ் (Pm Cares) நிதி விவரங்களை, தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கக்கோரிய பொதுநல மனு தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, பி.எம். கேர்ஸ் என்ற சிறப்புக் கணக்கை அண்மையில் தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதி கணக்கு இருக்கும்போது, இந்த புதிய கணக்கு எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகிய பாஜக அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கணக்கை சி.ஏ.ஜி அமைப்பால் தணிக்கை செய்யமுடியாது எனக் கூறப்பட்டதால் இந்த சர்ச்சை பூதாகரமானது. இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த கணக்கு தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டபோது, பிரதமர் அலுவலகம் இதுதொடர்பான தகவல்களை தர மறுத்தது. இதனையடுத்து பி.எம்.கேர்ஸ் நிதி விவரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று இதனை விசாரித்த நீதிமன்றம், பி.எம். கேர்ஸ் நிதி விவரங்களைத் தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கக்கோரிய பொதுநல மனு தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்