Skip to main content

61 நாட்களில் தீர்ப்பு; சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 06/12/2024 | Edited on 06/12/2024
the court verdict in the case of the girl case and Justice in 61 days in west bengal

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கனாஸின் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி டியூஷன் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, 19 வயது இளைஞரான சர்தார் என்பவர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

இதற்கிடையில், வெகு நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், குழந்தையை காணவில்லை என ஜெய்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சர்தாரை 2.5 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தான் செய்த குற்றத்தை சர்தார் ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் இருந்த இடத்தை கூறினார். இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்கப்பட்டு, முழுமையான விசாரணையை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அக்டோபர் 30ஆம் தேதி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குள் 25 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி விசாரணையை முடிப்பதற்கு முன்பு நீதிமன்றம் 36 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைக் கேட்டது.

இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 61 நாட்களில் குற்றவாளிக்கு பாருய்பூரில் உள்ள போக்சோ நீதிமன்றம் இன்று (06-12-24) தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி சுப்ரதா சாட்டர்ஜி மற்றும் முஸ்தகின் சுப்ரதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு, உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமை ஈடுபடும் குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதிக்கும் விதமாகவும், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையிலும் புதிய சட்ட மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்