Skip to main content

'ரூபாய் 2 கோடி வரை வட்டிக்கு வட்டியில்லை' -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

 

CORONAVIRUS LOCKDOWN INDIA EMI BANKS SUPREME COURT UNION GOVERNMENT

 

 

ரூபாய் 2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, பொது மக்கள் வங்கியில் பெற்றக் கடன்களுக்கான மாத தவணைகள் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை செலுத்த தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.

 

இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் வங்கியில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யமுடியாது என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது. மேலும், மாத தவணையை செப் 30- ஆம் தேதி வரை செலுத்த தேவையில்லை என்று காலக்கெடுவை நீட்டித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

 

இந்த நிலையில், வட்டிக்கு வட்டி விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு. அதைத்தொடர்ந்து ஆய்வு செய்த குழு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

 

குழுவின் அறிக்கையை ஏற்ற மத்திய அரசு, வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

 

அதில், 'கரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு ரூபாய் 2 கோடி வரை வட்டிக்கு வட்டியில்லை, வட்டிக்கு வட்டி வசூலைத் தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன், தனி நபர் கடன், கல்விக்கடன், வாகனக்கடனுக்கான மாத தவணை வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. சிறு, குறு, தொழில் கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றவர்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் சரியாக தவணை செலுத்தியவர்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படமாட்டாது' என குறிப்பிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
VVPAT case: Judgment in the Supreme Court today

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்பட்டதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இரண்டாவது முறையாக கடந்த 18 ஆம் தேதி (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். இந்நிலையில் விவிபேட் தொடர்பான இந்த வழக்கில் இன்று (24.04.2024) உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 

Next Story

‘பதஞ்சலியின் மன்னிப்பை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Supreme Court condemns on Patanjali's apology needs to be looked at with a lens

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (23-04-24) நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.