Skip to main content

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா; தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

Published on 03/09/2020 | Edited on 04/09/2020

 

 Corona increasing in Pondicherry; Condemning the failure to take preventive measures, AIADMK MLAs Dharna!

 

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று மற்றும் மரணத்தை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இன்று (03.09.2020) சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புதுச்சேரியில் தி.மு.க துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் கரோனா நோய்த் தொற்றும், அதனால் ஏற்படும் மரணமும் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றின் கட்டுக்கடங்காத நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழுவை புதுச்சேரிக்கு அனுப்பியது. அக்குழுவின் பரிந்துரைப்படி புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை செயல்பாடு இல்லை. மாநிலம் முழுவதும் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, சிகிச்சையை மேம்படுத்த வேண்டும் என்ற நிபுணர் குழுவின் ஆலோசனை ஏற்கப்படவில்லை.

 

 Corona increasing in Pondicherry; Condemning the failure to take preventive measures, AIADMK MLAs Dharna!


கடந்த வாரத்தில் தினந்தோறும் சுமார் 1,800 நபர்களுக்கு பரிசோதனை செய்து வந்த நிலையில், தினந்தோறும் குறைந்தது 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் பரிசோதனை எண்ணிக்கை இன்று ஆயிரத்து 800 -இல் இருந்து ஆயிரத்து 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றுடன் நேரிடையாக மருத்துவமனைக்குச் செல்பவர்கள் ஏதாவது கூறி பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. கடந்த வாரம் பரிசோதனை கிட்டுகளும், பரிசோதனை முடிவுகளை அறியும் கருவிகளையும் அதிகம் வாங்கியிருப்பதாக முதல்வர் கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை என்றால் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே இயங்கிய நடமாடும் பரிசோதனை கூடத்தையும் நிறுத்தியது ஏன்?


நோய்த் தொற்று எண்ணிக்கை தினசரி 600 அளவில் வந்தவுடன் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டது யார்? பரிசோதனை எண்ணிக்கை குறைப்பதால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை அரசு ஏன் உணரவில்லை. பரிசோதனை செய்யவும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட ஆளாய் அலைவது அரசுக்கு தெரியுமா? ஒருபுறம் முதல்வர் படுக்கைவசதியும், பரிசோதனை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படும் எண்கிறார். ஆனால் மறுபுறம் நடப்பதோ நேர்மாறாக உள்ளது.


புதுச்சேரி முழுவதும் ஜிப்மரில் சுமார் 350, அரசு மருத்துவக் கல்லூரியான இந்திராகாந்தி மருத்துவமனையில் 450, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 640, பல் மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 1,500 படுக்கை வசதிகளே உள்ள நிலையில் புதுச்சேரியில் 2,366 நோயாளிகள், உள்ளிருப்பு நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற பொய்யான கணக்கை கூற வேண்டிய அவசியம் என்ன?

 

Nakkheeran


படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் அதிகப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள நிலையில் அவைகளை அரசு ஏன் கையகப்படுத்தவில்லை? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

 

கரோனா பாசிட்டிவ் உள்ளவர்களை வீட்டில் தனிமைப் படுத்துவதால் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. அதைத் தடுக்க அரசிடம் போதிய கட்டிட வசதிகள் இருந்தும், அங்கு நோயாளிகளை தனிமைப்படுத்த அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கணக்கை சரிசெய்ய, பரிசோதனை எண்ணிக்கையை குறைத்து மக்களின் உயிரோடு சுகாதாரத்துறை துணையோடு ஆளும் அரசு விளையாடிக் கொண்டு வருகிறது.


சாதாரண நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்டிஜென்ட் டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை? இந்த டெஸ்ட் எடுத்து அதில் பாசிட்டிவ் வந்தவர்களுக்கு ஆர்.டி - பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்க அரசு முன்வர வேண்டும். இவைகள் எதையும் செய்யாமல் சுகாதாரத்துறை நிர்வாகம் மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த இறப்பு விகிதம் இன்று 1.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி 10 -க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். அதற்குரிய வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்தாதே இந்த மரணங்களுக்கு காரணம். ஏனத்தில் வென்டிலேட்டர் வசதி 12 இருந்தும் அங்கு உரிய மருத்துவர்கள், மயக்க மருந்து மருத்துவர்கள் இல்லை. புதுச்சேரியில் பல வென்டிலேட்டர் கருவிகள் சரியாகச் செயல்படவில்லை. இந்திய அளவில் சின்னஞ்சிறு மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரியில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக அரசும், துணைநிலை ஆளுநரும் தங்களது அரசியல் விளையாட்டு, வார்த்தை ஜால அறிக்கைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

 

Ad


இதுதொடர்பாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொய்யான தகவல்களை தினமும் கூறிவருகின்றனர். எனவே கரோனா தொற்றை தடுத்து, மரணத்தைக் குறைக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க தர்ணா போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்