Skip to main content

கேரளா: கரோனா தேவி கோயில் பூஜிக்கும் பூசாரி...

Corona Devi Temple in Kerala

 

கொடூர கரோனாவின் ஆக்டோபஸ் கொடுக்குகள் சுனாமியாய் பாய்ச்சலெடுத்திருக்கிறது. வல்லரசுகளென்ன, படா படா ஜாம்பவான் நாடுகள்கூட அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதுடன் மீள தடுப்பு மருந்துகளின் வழிதெரியாமல் பல வழிகளிலும் கிழிந்து கந்தலாகிப் போய்க்கிடக்கிறது.

வேறு பாதை தெரியாமல் தவிக்கும் இந்திய மக்கள், தங்களின் கடைசி நம்பிக்கையான, தாக்கும் அதனிடமே சரணாகதியடைவது என்ற முடிவுதான் தற்போது வெளிப்படையாகியிருக்கிறது. வம்பு எதற்கு என கரோனாவிடமே சரணடைந்து விட்டனர் போல மக்கள்.

அதன் முன்னோட்டம்தான் உ.பி., பீகார், ஜார்கண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் (பழங்குடியினர் உட்பட) பெண்கள், கரோனா பூஜை நடத்தி வருகிறார்களாம். ”கரோனா மாயி” என வைரஸை பெண் தெய்வமாக்கி வணங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “WHAT WAS ILLEGAL YESTERDAY, IS LEGAL TODAY. WHAT IS ILLEGAL TODAY, WILL BE LEGAL TOMORROW.”

அதாவது, நேற்று எவை எல்லாம் தப்பான காரியம் என்று சொல்லப்பட்டதோ அவைகள் இன்று நியாயமாகியுள்ளது. இன்றைக்கு எதெல்லாம் முரண்பாடானது, கேடான செயல் என்று சொல்லி ஒதுக்கப்படுவது, நாளை அதுவே நியாயம் என்று மாறும் என்பதே.

அதே போன்றுதான் பெண்களின் நம்பிக்கையான கரோனா மாயி வழிபாட்டைபோல கேரள மாநிலம் கொல்லத்தின் கடைக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் முகூர்த்தன் என்கிற ஆன்மீக நபர் கரோனா தேவி என்று ஒரு அம்மன் சிலை அமைத்து அதனை கரோனா தேவி என்று பூஜை புனஸ்காரங்களை செய்து வருகிறார். அதை தன் வீட்டின் மேல்மாடியில் கோவிலாகவே அமைத்துள்ளார். இது மாவட்ட மட்டுமல்ல கேரளாவின் பிற பகுதிகளிலும் தற்போதைய ஹாட் டாப்பிக்காகியுள்ளது. தத்துவப்படி இச்செயல் நாளைய தினம், சரியானது என்று கூட பரவலாக்கப்படலாம் யார் கண்டது. அனிலனின் கரோனா தேவி ஆலயம் குறித்து நாம் அவரிடம் பேசினோம். இப்படி செய்வதால் உங்களை பைத்தியக்காரன் என்று சொல்வார்களே என்றதற்கு.

“அவரோ எனக்கு யாருடைய சர்ட்டிபிகேட்டும் தேவையில்லை. என் மனதில் தோன்றியதைச் செய்துள்ளேன். வேத புராணத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒருவர் இந்த கடவுளைத் தான் வழிபட வேண்டும் என்று அது சொல்லவில்லை. என் இஷ்டம் நான் கரோனாவை தேவியாக வழிபடுகிறேன்.

இந்தக் கரோனா யுகத்தில் மக்களில் எத்தனை பேர் நிம்மதியாக நார்மலான மனப்பக்குவத்தில் இருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா. நீங்கள் நார்மலாக இருக்கிறீர்களா. நான் நார்மலாகத்தானிருக்கிறேனா சொல்லுங்கள் என்றால் இங்கு யாரும் நார்மல்லாயில்லை.

தேசத்தில், தமிழகத்தில் பலகால ஆண்டுகளுக்கு முன்பு சிக்கன் பாக்ஸ் என்று சொல்லக் கூடிய அம்மை நோய் பரவியது. பலர் அதற்குப் பலியானார்கள். அது ஒரு வைரஸ்தான். பின்பு சிக்கன் பாக்ஸ் நோயையே அம்மன் என தெய்வமாக்கி மக்கள் வழிபடவில்லையா? அதனை நம் கேரளாவில் வைசூரி என்கிறார்கள். பின்பு வைசூரி என்று சிலை வைத்து வழிபட்டார்கள் மக்கள். இப்போது கொல்லம் உட்பட கேரளாவில் பல நூறு வருடங்களுக்கு முன்பே கோவில்களில் வைசூரி கோயில் என்று தனிக் கோவிலே இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியாதா? என்றவரிடம் இது மூட நம்பிக்கைத்தானே என்று கேட்டதற்கு.

எது மூட நம்பிக்கை. உங்களின் நம்பிக்கை எனக்கு மூட நம்பிக்கையாகப்படலாம். என்னுடைய நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படலாம். அம்மை நோயான சிக்கன் பாக்ஸ் வைரஸ்தானே. அதேபோன்று கரோனாவும் ஒரு வைரஸ்தான். அதனால் தான் கரோனா தேவி ஆலயம் அமைச்சிருக்கேன். இது என்னுடைய தனிப்பட்ட  பிரைவஸி.

பசுவின் கன்றுக்குட்டிக்கும், யானைக்கும் கோயில் வைச்சிறுக்காங்கயில்லியா. அதைக் கும்புடுதீக. யானை, பாம்பு, நீங்க கடவுளா நெனைச்சுப் பூஜை பண்ணலியா. அதைப்போலதான் நான் கரோனா வைரஸ்ல கடவுளிருக்கார்னு நம்புறேன். அதனால பூஜை செய்றேன் இது தப்பா.

நா, யாரையும் இதைக் கும்புட வாங்கன்னு சொல்லல. என் வீட்டுக் கோவிலுக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிடல. என் வீட்டுக்கு யாரும் வரவேண்டாம்னு சொல்றேன். பூஜை பண்ணி, உண்டியல்ல காசு போடுங்கன்னு யாரையும் அழைக்கல்ல. என்னுடய தனிப்பட்ட பிரைவஸியில தலையிட யாருக்கும் உரிமையில்ல. கரோனாவ நான் தெய்வமாக பூஜித்து சூடம் காட்டுறேன்” என்றார் ஓங்கிய குரலில்.

அனிலனின் பூர்வீக குடும்பத்தார்க்கென்றே வேறொரு பகுதியில் தனிக்கோவிலே இருக்கிறதாம். தன்னுடைய சிறிதளவு இடத்தில் காய்கறிகளை பயிரிட்டு வியாபாரம் செய்பவர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அனிலன், தன் வீட்டின் மாடியில் பூஜை அறையுடன் கூடியதில் தனியாகக் கரோனா தேவி சிலை அமைத்துப் பூஜிக்கிறார். வருங்காலங்களில் கரோனா தேவிக்குக் கொடை கொடுத்தும் கொண்டாடப்படலாம். யார் கண்டது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்