Skip to main content

கோர்ட்டுக்கு சென்ற ப.சிதம்பரம்… ‘கோ பேக்’ என கொந்தளித்த காங்கிரஸார்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Congress party leader P. Chidambaram west bengal

 

மேற்கு வங்கம் மாநிலம், மெட்ரோ டெய்ரி நிறுவனத்தின் பங்குகளை அம்மாநில அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகாரை கையில் எடுத்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொல்கத்தாவில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 

இது தொடர்பாக, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மேற்கு வங்க அரசிடம் இருந்து பங்குகள் வாங்கிய தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ப. சிதம்பரம், கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக  ஆஜராகினார். காங்கிரஸ் எதிர்தரப்பில் உள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வாதாடினார். 

 

இதற்கு மேற்குவங்க மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

முன்னதாக, நீதிமன்றத்தில் வந்திருந்த போது, அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என அவரை மறித்தனர். மேலும், அவரைச் சூழ்ந்து கருப்பு ரிப்பன் காட்டியதோடு, அவரை திரும்பி செல்ல வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்கு, அக்கட்சியினரே கருப்பு கொடி காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.