நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை முடங்கியது. இதனிடையே நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்குக் கீழ் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று அவை தொடங்கிய போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “தெலங்கானா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிரும் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு அடியிலிருந்து கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்றார்.
இதுகுறித்து விசாரணை முடியும் முன்பே அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்.பி.யின் பெயரை வெளியிட்டிற்க கூடாது என்று எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால், அவையில் விவாதிக்க முடியாது. விசாரணை முடிந்தபிறகே விவாதிக்க வேண்டும் ” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் எனது இருக்கைக்கு கீழ் இருந்த ரூபாய் நோட்டுகள் என்னுடையது அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.