Skip to main content

“ராகுல்காந்தியை சந்திக்க 10 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்றார்கள்” - காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு புகார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Congress MLA sensational complaint They told me to lose 10 kg to meet Rahul Gandhi

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாபா சித்திக் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை தலைவராக பொறுப்பு வகித்து வந்த இவர் சமீபத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக், காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பை காங்கிரஸ் இளைஞரணித் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், அவரை, கட்சித் தலைமை, மும்பை காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜீஷன் சித்தன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “ராகுல் காந்தி ஒரு நல்ல தலைவர். அவர் வேலையை சரியாக செய்கிறார். மல்லிகார்ஜுன கார்கே எனக்கு தந்தை போன்றவர். கார்கே கட்சியின் மூத்த தலைவர். ஆனால், சில நேரங்களில் மல்லிகார்ஜுன கார்கேவின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. ராகுல் காந்தியை சுற்றியுள்ள நபர்கள் கட்சியை அழிக்கின்றனர். ராகுல் காந்தியை சந்திக்க பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தேன். 

ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை யாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் வந்த போது அவரை சந்திக்க விரும்பினேன். ஆனால், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நான் 10 கிலோ எடையைக் குறைத்தால்தான் ராகுல் காந்தியைச் சந்திக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். ராகுல் காந்தி தனது வேலையை நன்றாக செய்கிறார். ஆனாலும் அவரது அணி மிகவும் முரட்டுத்தனமாக இருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த வாரம் வரை காங்கிரஸுடனேயே இருப்பேன் என்று கூறினேன். ஆனால், காங்கிரஸ் நடந்துகொள்ளும் விதமும், நடந்துகொண்டிருக்கும் விதமும் தெளிவாகத் தெரிகிறது. 

சிறுபான்மையினருடன் இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் மும்பை காங்கிரஸின் தலைவராக, இதுவரை எந்த இஸ்லாமிய தலைவரும் இருந்ததில்லை. முஸ்லிம்களை பாதுகாப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், காங்கிரஸிலும், இளைஞர் காங்கிரஸிலும் தலைதூக்கும் வகுப்புவாதம் வேறு எங்கும் காணப்படவில்லை. காங்கிரஸுக்கு சிறுபான்மையினர் தேவையில்லை,  நாங்கள் தேவையில்லை என்று தெரிகிறது.  நான் இப்போது எனது விருப்பங்களைச் சரிபார்க்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது

சார்ந்த செய்திகள்

 

Next Story

காரில் ஆபாச செயல்;  காதலர்கள் மீது பாய்ந்த புதிய குற்றவியல் சட்டம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
new criminal law on lovers on Indecent act in a car in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ் ராஜ்குமார் சோனி(28). பட்டயக் கணக்காளரான இவர், பொறியியல் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், காதலர்கள் இருவரும்  காரில் சென்று கொண்டிருந்தனர்.

தரம்பேத் பகுதியில், அவர்கள் காரை ஓட்டிச் சென்றபோது, சூரஜ் ராஜ்குமாரின் காதலி ஓட்டுநர் சீட்டில் ஏறி ஆபாசமான செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற ஒருவர், அந்தச் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதனையடுத்து, இந்த விஷயத்தை போலீசார் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்து, காரின் எண்ணைக் கொண்டு உரிமையாளரைக் கண்டுபிடித்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சூரஜ் ராஜ்குமார் சோனி மற்றும் அவரது காதலி மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு, பொது இடத்தில் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சர்ச்சைகளில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி; அதிரடி நடவடிக்கை எடுத்த மராட்டிய அரசு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 Woman IAS officer embroiled in controversies in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். இவர் உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. தான் வைத்த கோரிக்கையை ஏற்பாடு செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, பூஜாவுக்கு சொந்த அறை வழங்கப்பட்டது. ஆனால், அந்த அறையில் கழிவறை இல்லாததால், அதை நிராகரித்துள்ளார். இதையடுத்து புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. 

பூஜா கேட்கரின் எல்லை மீறிய செயல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றனர். தொடர் புகார்கள் எழுந்ததால், பூஜா கேட்கர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ஜூலை 23ஆம் தேதி முசோரியில் உள்ள பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.