2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒருபகுதியாக காங்கிரஸும் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸும் தேசிய அளவில் கைகோர்த்துள்ளன. அண்மையில் டெல்லி சென்ற மம்தா, சோனியா மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விவாதித்தார். அதன்பிறகு சோனியா காந்தி நடத்திய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் மம்தா பங்கேற்றார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சி, பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாமால் அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கிடையே, திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளாக அங்கம் வகித்தவரும், காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக இருந்தவருமான சுஷ்மிதா தேவ் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனையடுத்து, சுஷ்மிதா தேவை திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக்கியது.
இதன்பிறகு நேற்று (29.09.2021) கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லூய்சின்ஹோ ஃபலேரோ திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இந்தநிலையில், காங்கிரஸில் இருந்து பலர் திரிணாமூல் காங்கிரஸிற்கு தாவிவருவது இரு கட்சிகளுக்கிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, அவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளதாவது, “மம்தா பானர்ஜி எப்போதுமே தனக்கு உணவளித்த கையைக் கடிக்க முயல்வார். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகளில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும். பாஜகவின் ட்ரோஜன் குதிரையான அவரை, பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் ஒருபோதும் நம்ப முடியாது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பிடியிலிருந்து தனது குடும்பத்தினரையும் கட்சித் தலைவர்களையும் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் மகிழ்விக்க அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார். காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற இலக்கை அடைய அவர் பாஜகவுக்கு உதவுகிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது.
காங்கிரஸ்ஸை பலிகொடுத்து திரிணாமூல் காங்கிரஸ் வளர்கிறது. முதலில் அதை மேற்கு வங்கத்தில் செய்தார்கள். தற்போது அதை தேசிய அளவில் செய்ய முயற்சிக்கிறார்கள். திரிணாமூல் காங்கிரஸ் அதன் கூட்டாளிகளை முதுகில் குத்துவதற்குப் பெயர் பெற்றது.”
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.