இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31.01.2024) தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்த பின் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தியக் குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்கும் சட்டம் ஆகும். இந்த சட்டத்தில் இருக்கும் கருத்துகள், ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு புறம்பாக பேசக் கூடிய கருத்தாக உள்ளது. எனவே இது குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தினோம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனக்கு பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பணிகள் எதும் நடைபெறவில்லை எனவே மத்திய அரசு இது குறித்து பேச வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் குறித்தும் பேச வேண்டும் என வலியுறுத்தினோம்:” எனத் தெரிவித்தார்.