Complaint against  Mitchell Marsh at Uttar Pradesh Police Station

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

Advertisment

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பைமீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம்என்றுமிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இது தொடர்பாக ஆஸ்திரேலிய மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்பவர், உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷ் பதிவிட்ட புகைப்படம் 140 கோடி இந்திய மக்களை புண்படுத்தியுள்ளது. அதனால் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடத்தடை விதிக்க வேண்டும் என்று அலிகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.