Skip to main content

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பு!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

chief minister siddaramaiah announcement made people happy

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று  அறிவித்திருந்தது.

 

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.  முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில்  நேற்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 

மேலும் இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சென்றடையும். குடும்பத்தலைவிகள் மாதம் 2000 ரூபாய் நிதியுதவி பெற ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை பெறப்படும். ஆகஸ்ட் 15 முதல் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.

 

வரும் ஜூலை 1 முதல் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் 10 கிலோ இலவச அரிசி பெறலாம். மகளிர் இலவச பயணம் ஜூன் 11 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் படி மகளிர் ஏசி மற்றும் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தவிர மற்ற சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம்" எனத் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டம் குறித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறுகையில், "கர்நாடகாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளோம்" என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பானது கர்நாடக மாநில மக்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழ்நாட்டைப் போல் நாமும் இருக்க வேண்டும்” - சித்தராமையா பேச்சு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Siddaramaiah speech We should be like Tamil Nadu

கர்நாடகம் எனப் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில் கன்னடத்தாய் என்று கூறப்படும் நாததேவி புவனேஸ்வரி அம்மனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை, நேற்று (20-06-24) கர்நாடகா மாநிலம் விதான சவுதா மேற்கு நுழைவு வாயில் அருகே  நடைபெற்றது. இந்த விழாவில், அம்மாநில முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு சிலை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டி பேசினார்.

அதில் அவர், “கர்நாடக மாநிலத்தில், கன்னட சூழலை உருவாக்குவது அனைவரின் கடமை. அதற்கு கர்நாடகாவில் வாழும் மக்கள் அனைவரும் கன்னடம் கற்க வேண்டும். நாம் அப்படி அமைதியாக இருக்க முடியாது. கன்னடர்கள் அசிங்கமானவர்கள் இல்லை. கன்னடத்தின் மீது அனைவருக்கும் காதல் வளர வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள பெருந்தன்மைவாதிகள் போல் நாம் மாறக்கூடாது. நம் மொழி, நிலம், தேசம் ஆகியவற்றின் மீது மரியாதையையும், அபிமானத்தையும் வளர்க்க வேண்டும்.

கர்நாடகாவில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடத்தில் பேச அனைவரும் முடிவு செய்ய வேண்டும். கன்னடம் தவிர வேறு எந்த மொழியும் பேசுவதில்லை என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். கன்னடர்கள் பெருந்தன்மை உடையவர்கள். அதனால் பிற மொழி பேசுபவர்கள் கூட கன்னடம் கற்காமல் வாழக்கூடிய சூழல் கர்நாடகாவில் உள்ளது. 

ஆனால், தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களில், ​​உள்ளூர் மொழியைக் கற்காமல் அங்கே வாழ்வது எளிதல்ல. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் போன்ற மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழியில்தான் பேசுவார்கள். அதனால், நாமும் நம் தாய்மொழியில் பேச வேண்டும். அது நம்மைப் பெருமைப்படுத்த வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“நீட் தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்கு ஆணையம் சாதகமாக இருக்கிறது” - செல்வப்பெருந்தகை

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Selvaperunthagai strongly oppose NEET exam

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “அரியலூர் அனிதா மரணத்திற்குப் பின்னர் நீட் தேர்வு தேவையா எனத் தேசம் முழுவதும் கேள்வி எழுந்தது. ஜெயலலிதா இருந்தவரை அனுமதிக்காத நீட் தேர்வு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளே நுழைந்து. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் ரத்து மசோதாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்படி ஒரு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு இதுவரை அமைந்ததில்லை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது என ஒரு பரப்புரையைச் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தடுப்பணையில் நீட் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு சங்கல்ஃப் என்ற இயக்கம் மனுதாரராகப் போய் நிட்டை நடத்தலாம் என அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். 

நீட் நடத்துவதில் ஆளுநரும், பிரதமரும் தீர்மானமாக உள்ளனர். நீட் என்பது பல கோடி வருமானம் தரக்கூடிய விஷயமாக மாறி உள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது, ஆசிரியர்களே தேர்வு எழுதுவது, சட்டத்தில் இல்லாததை எல்லாம் மோடியின் அரசு நீட்டில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. நீட் வணிகமயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்கள் அலுவலகத்தை திறக்கிறார்கள். பள்ளிகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்விற்கும் இலட்ச கணக்கில் பணத்தை கட்ட வேண்டும். கிராம புறமானவர்கள் எப்படி இதில் சேர முடியும்? ஏழை எளிய மாணவர்கள் இந்த தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவர்? இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது மாமனிதன் என்று சொல்லக்கூடிய மோடிக்கும், மத்திய அரசுக்கும் தெரியவில்லை. 

நீட் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த தற்கொலை விவாகரத்தில் பிரதமர், மத்திய அரசும் மௌனமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் தேர்வு எழுதச் சென்றால் ஆடையை கத்தரிப்பது, தாலி உள்ளிட்ட ஆபரணங்களைக் கழட்ட சொல்லும் ஆணையம், பணம் கொடுப்போருக்குச் சாதகமாக இருக்கிறது. தேசிய தேர்வு முகமையில் எப்படிப்பட்ட அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை வலது இடது புறங்களில் வைத்துக்கொண்டு நடக்கும் இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி இப்போதே நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை மாநிலங்கள் எப்போது ஏற்றுக் கொள்கிறதோ அப்போது நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர வேண்டும்” விடக்கூடாது" என்றார்.