Skip to main content

"நாங்கள் சொன்னது சரி என நிரூபிக்கப்பட்டுள்ளது" - ப.சிதம்பரம்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

chidambaram tweets about two thousand rupees demonetization issue

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், "எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடியது அல்ல. கருப்பு பணத்தை தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நவம்பரில் நாங்கள் இதைச் சொன்னோம், நாங்கள் சொன்னது சரி என்று தற்போது  நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

chidambaram tweets about two thousand rupees demonetization issue

 

500 மற்றும் 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக வழங்கப்பட்டது. பணமதிப்பிழப்பு  செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "தனக்கு தானே விஸ்வகுரு என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டவர் முதலில் நடவடிக்கை எடுத்துவிடுவார். அதன் பின்னர்தான் அவர் அது குறித்து சிந்திப்பார். 2016 நவம்பர் 8 இல் அவ்வளவு ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன" எனக் கருத்து தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சில கெட்ட சக்திகள் வெளியேறியுள்ளது'-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
nn

காங்கிரஸில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி அண்மையில் பாஜகவில் சேர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அதேநேரம் தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருக்கிறார். யார் கண்டிப்பாக தோற்பார்கள் என்ற பட்டியலை இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள். நம்முடைய ஊரின் சாம்பார் பிடித்திருக்கிறது போல அதனால் தான் மோடி அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.

திமுக கூட்டணியில் சுமூகமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து வெளியிடப்படும். இழுபறி எல்லாம் இல்லை. கண்டிப்பாக இந்த தேர்தலோடு காணாமல் போகப் போகிறவர் யார் என்றால் மோடி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். தமிழகமே அவர்களுடைய சொந்த பூமி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து வருகின்ற பணத்தையோ, நிதியையோ, வரியையோ மீண்டும் தமிழக வளர்ச்சிக்கு கொடுக்கலாமென்று இல்லாமல் அவர்கள் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழரை லட்சம் கோடி ரூபாயை மோடி சுருட்டி இருக்கிறார். உலக வரலாற்றில் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், லஞ்சம் ஊழல் எங்கேயும் நடந்தது இல்லை'' என்றார்.

விஜயதரணி பாஜகவிற்கு சென்றது குறித்து கேள்விக்கு, ''சில கெட்ட சக்திகள், மோசமான சக்திகள் காங்கிரசை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியேறி இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்''எ ன்றார்.

'தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன' என்ற கேள்விக்கு, ''தமிழகத்தில் கஞ்சா குடிக்கும் பழக்கம் என்பது நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. இப்போது அதை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கும் பொழுது பல இடங்களில் தப்புத் தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். அதிமுகவில் எத்தனை சமூகவிரோதிகள் இருக்கிறார்கள் என பட்டியல் எடுத்தால் தமிழகத்தில் பாஜகவிற்கு அடுத்து அதிகமாக குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான் என்பது தெரிய வரும்'' என்றார்.

Next Story

இமாச்சலில் நடக்கும் அரசியல் சூழல்; ஆட்சியை நிறைவு செய்யுமா காங்கிரஸ்?

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதில், அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் ஆட்சி செய்து வருகிறார். இங்கு மொத்தம் உள்ள 68 எம்.எல்.ஏக்களில், காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியையும் சேராத சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்த தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. அதில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி. சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தார். இதனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேரும், பா.ஜ.க வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களை நம்பி தேர்தலில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஒருவர் தோல்வியடைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இதற்கிடையே, இமாச்சலப்பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர், எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் ஒரு வேட்பாளர் என இருவர் போட்டியிட்டனர். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இமாச்சலப்பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டசபை கூடியது. 

அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். 

 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இதற்கிடையே, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால், அங்கு அரசியல் குழப்பம் பூதாகரமாக வெடித்தது. இதனை அறிந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் உடனடியாக இமாச்சலப்பிரதேசத்துக்கு சென்று ராஜினாமா செய்வதாக அறிவித்த விக்ரமாதித்ய சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

அதே வேளையில், இமாச்சலப்பிரதேச முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகத் தகவல் பரவி வந்த நிலையில், அது தவறான செய்தி என அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் அரசு இமாச்சலப்பிரதேசத்தில் 5 ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த நிலையில், நேற்று (29-02-24) இமாச்சலப்பிரதேச சட்டசபை கூடியது. அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டார். மேலும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 6 பேரின் பதவியும் பறிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். மொத்தம் 68 இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தால் சட்டப்பேரவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையைவிட கூடுதலாக காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதால், தற்போதைய சூழலில் இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியானது காப்பாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், இமாச்சலப்பிரதேச முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரும் இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மனைவியுமான பிரதிபா சிங் நேற்று (29-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாநிலங்களவைத் தேர்தலில் அந்த 6 எம்.எல்.ஏக்கள் கட்சி மேல் உள்ள வருத்தத்தில் தான் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். ஓராண்டுக்கு மேலாகியும் அவர்களின் குரல்களுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை. அவர்களை என்றாவது ஒரு நாள் அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது. நாங்கள் பலமுறை கட்சி மேலிடத்தில் பேசினோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லை. விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.