Skip to main content

4வது உயரம் உயர்த்தும் நடவடிக்கைக்குத் தயாராகும் ‘சந்திரயான்-3’ - உற்சாகத்தில் இஸ்ரோ

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Chandrayaan-3- ISRO in excitement as it prepares for 4th lift-off

 

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான் - 3 என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது சந்திரயான் - 3 நிலை குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

தொடர்ந்து சந்திரயான் - 3 தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

 

நேற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கொடுத்துள்ள அப்டேட்டின் படி சந்திரயான்-3 விண்கலம் 41,963 கிலோ மீட்டர் X 226 கிலோ மீட்டர் சுற்று வட்டப் பாதையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வரும் சந்திரயான்-3இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும். அந்த இடத்தில் உந்துசக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்துவார்கள். அதற்கானப் பணிகளை இஸ்ரோ தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது.

 

நேற்று விண்கலத்தின் உயரத்தை இரண்டாவது முறையாக உயர்த்தும் நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக உயரம் உயர்த்தும் நடவடிக்கை இன்றைய தினம் 2 மணியிலிருந்து 3 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக உயரம் உயர்த்தும் நடவடிக்கையும் வெற்றியடைந்துள்ளதாக பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சந்திரயான்-3ஐ கண்காணிக்கும் விஞ்ஞானிகள்  குழு தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்தகட்டமாக வரும் ஜூலை 20 ஆம் தேதி நான்காவது உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார்.