/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch-ni_0.jpg)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 23 நாட்களாக சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த வழக்கு பொய் வழக்கு எனவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீதிமன்றகாவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கையை கண்டித்து, காந்தி ஜெயந்தி நாளான நேற்று (02-10-23) சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி நேற்று ராஜமகேந்திரவரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருடன், கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர், கட்சித் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ‘சத்யமேவ ஜெயதே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடுவும் சிறையில் இருந்து கொண்டே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதே போல், சந்திரபாபுவின் மகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)