சமீபத்தில் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதே வகையில், மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று (21-06-24) கூடியது. இந்த கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக புச்சையா சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 4வது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, 30 மாதங்களுக்கு முன்பு போட்ட சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரபாபு நாயுடு, “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்த சபையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை இல்லை. இனிமேல் இந்த சட்டமன்றத்துக்குள் வர மாட்டேன். அப்படி வந்தால், நான் முதல்வராகப் பதவியேற்ற பிறகுதான் மீண்டும் சபைக்கு வருவேன்” என்று சபதமிட்டு அவையை விட்டு வெளியேறினார். அன்று முதல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா சட்டமன்றத்துக்குள் சந்திரபாபு நாயுடு காலடி எடுத்து வைக்கவில்லை.
30 மாதங்களுக்கு சட்டமன்றத்துக்குள் வராத சந்திரபாபு நாயுடு, முதல்வராகப் பதவியேற்ற பின் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். இதைத் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஏற்கெனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவையும், தற்போது சட்டப்பேரவைக்குள் முதல்வராக நுழையும் வீடியோவையும், இணைத்து தெலுங்கு தேசம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.