Cauvery water issue All party meeting in Karnataka today

Advertisment

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசுகாவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், காவிரி நதி நீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் கடந்த சில தினங்களாகத்தமிழகத்திற்கு சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட கர்நாடகாவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மேலும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திற்குத்தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக இன்றுஅனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.