Skip to main content

காவிரி நதி நீர் விவகாரம்; கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

Cauvery water issue All party meeting in Karnataka

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்னதாகத் தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த  ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து கடந்த 3 தினங்களாக தமிழகத்திற்கு சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட கர்நாடகாவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மேலும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்