Skip to main content

காவிரி விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகா

 

Cauvery issue Karnataka moves Supreme Court

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் இன்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

 

இதற்கிடையில் இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12 ஆயிரத்து 500 கன அடி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை மனுத் தாக்கல் செய்யப்படும் எனக் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !