Skip to main content

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! 

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

supreme court

 

மஹாராஷ்ட்ரா மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, இடஒதுக்கீடு என்பது 50 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இதனையடுத்து மராத்தா இடஒதுக்கீட்டிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று (08.03.201) விசாரணை நடத்திய நீதிபதிகள், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டலாமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

 

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிரான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.