Skip to main content

பட்ஜெட் பாரபட்சம்; இந்தியா கூட்டணி போராட்டம் அறிவிப்பு

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
budget bias; Announcement of India Alliance struggle

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

budget bias; Announcement of India Alliance struggle

செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பல கோரிக்கைகளை எடுத்து வைத்திருந்தேன். நிதிநிலை அறிக்கையில் இதுவெல்லாம் இடம்பெற வேண்டும்; இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்க கூடிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்; கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் இப்படி சில கோரிக்கைகளை நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக்கிய ஒரு சில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான் என்னைப்  பொறுத்தவரை. எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்று அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழகத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறேன். அதை நான் புறக்கணிக்க போகிறேன். நாளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவார்கள்'' என்றார்.

இந்நிலையில் பட்ஜெட் பாரபட்சமானது என ஒரு நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்கள் நாளை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்