BJP senior leader's subramanian swamy says Prime Minister's role in building Ram temple is zero

உத்தரப் பிரதேசத்தில் உள்ளஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அன்றைய தினத்தில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிரவிட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22ஆம் தேதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ராமர் கோவில் கட்டியதில் பிரதமர் மோடியின் பங்கு வெறும் ஜீரோ தான் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் மட்டும் தான் கட்டியது போல் காட்டிக் கொள்கிறார். ஆனால், உண்மையில் அவரது பங்களிப்பு ஜீரோதான். ராமர் கோவிலுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் ஜோதிர்லிங்கம்காசி கோவில் கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.