Skip to main content

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்; பாஜக எம்.பி மீது போக்சோ வழக்கு

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

BJP MP POCSO case against Brij Bhushan

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம்  3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண், சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு இந்திய விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தபோது, உடனடியாக வீராங்கனைகளின் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதையடுத்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பாஜக நிர்வாகி அஞ்சலை கைது

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nn

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

nn

தொடர்ந்து பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை” - அசாம் முதல்வரின் சர்ச்சை பேச்சு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Controversial speech of Assam Chief Minister about islam people

அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அதிக பெரும்பான்மை மக்களாக இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “2041-க்குள் அசாம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக மாறும். இது நிஜம், யாராலும் தடுக்க முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரியின்படி அசாமின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர். எனது அரசாங்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்து சமூகத்தின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ராகுல் காந்தி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக மாறினால், அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும். மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாம் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை” எனப் பேசினார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறித்து பா.ஜ.க முதல்வர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.