BJP MLA Vote for Congress Party in karnataka at rajyasabha election

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதில், ஜே.பி. நட்டா, சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களில் இன்று (27-02-24) தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தலா ஒருவரும் போட்டியிட்டனர்.

Advertisment

இந்த நிலையில், பெங்களூர் யஷ்வந்தபுரத்தைச் சேர்ந்தபா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி சோமசேகர், கட்சி மாறி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்.டி. சோமசேகர், காங்கிரஸுக்கு வாக்களித்ததை பா.ஜ.க தலைமை கொறடாவான தோடண்ண கவுடா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கட்சி மாறி வாக்களித்ததற்கு சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க கொறடா அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி. சோமசேகர் கூறுகையில், “வாக்குறுதியை உறுதியளித்தவர்களுக்கு வாக்களித்துள்ளேன். தனது தொகுதிக்கு நிதி ஒதுக்க உறுதி தரும் எம்.பி.யை தேர்வு செய்ய ஆதரவு தருவேன்” என்று கூறியுள்ளார். அதே வேளையில், எஸ்.டி. சோமசேகர் தவிர மேலும் சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment