Skip to main content

ஐந்து மண்டலங்கள், 11 பேர் கொண்ட குழு... அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் பாஜக...

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

bjp election plan for west bengal

 

பீகார் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக.

 

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை, அண்மையில் பா.ஜ.க நியமித்தது. குறிப்பாக அதிக கவனம் செலுத்தவேண்டிய மாநிலமாக, மேற்குவங்கத்தை பா.ஜ.க தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 16 உறுப்பினர்களை மட்டுமே மேற்குவங்க சட்டசபையில் கொண்டுள்ள பா.ஜ.க கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ள பா.ஜ.க இம்முறை சட்டசபைத் தேர்தலில் மம்தாவுக்குப் போட்டியாக உருவெடுக்க முயன்று வருகிறது. எனவே இதற்காக மேற்குவங்க பா.ஜ.க பொறுப்பாளராக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவை நியமித்தது பா.ஜ.க. 

 

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிடவும், அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும், 11 பேர் கொண்ட குழு ஒன்றை பா.ஜ.க அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழுவதும் பாஜகவின் முக்கியத் தலைவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள, இந்தக் குழுவில் கட்சி பொதுச் செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் துஷ்யந்த் கவுதம், சுனில் தியோதர், வினோத் தவ்தே, வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி, அமித் மால்வியா, மாநிலத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாஜகவின் திட்டப்படி, மேற்குவங்க மாநிலத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, இந்தக் குழு தேர்தல் பணியாற்றும் என்றும், வேட்பாளர் தேர்வும் இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தக் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகிய இருவரும் வழிநடத்த உள்ளதாகவும், இந்தக் குழுவில் உள்ள சில தலைவர்கள் கொல்கத்தாவில் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதலியைச் சுட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்; விசாரணையில் திடுக் தகவல்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
A young man who incident his girlfriend in west bengal

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரும் நிக்கு குமாரி துபே ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் எனும் கெஸ்ட் கவுஸ்ஸில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4:30 மணியளவில் ராகேஷ், தனது காதலியான நிக்குவை ரிசப்ஷனில் வைத்து துப்பாக்கியைக் கொண்டு சுட்டார். இதில் நிக்குவின் தொடை பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்ட கெஸ்ட் கவுஸ் ஊழியர்கள் அலறியடித்து, படுகாயமடைந்த நிக்குவை பார்த்தனர். அப்போது, திடீரென்று, ராகேஷ் இருந்த அறையில் இருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.

உடனடியாக ஊழியர்கள், அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ராகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த நிக்குவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ராகேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகேஷும், நிக்குவும் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த உறவை முறித்துக் கொள்ள நிக்கு விரும்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராகேஷ், நிக்குவை கொலை செய்ய முயற்சி செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கட்டி வைத்துத் தாக்குதல்; நிலைகுலைந்த பெண் - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 woman and a man were tied up and beaten in public in West Bengal

மேற்கு வங்கம் மாநிலத்தில் பொதுவெளியில் ஒரு பெண்ணையும், ஆணையும் கட்டி வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருவதால், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் நடந்துள்ளது. வீடியோவில், ஒரு ஆணையும், பெண்னையும் மூங்கில் கம்பால் சரமாரியாக ஒருவர் தாக்குகிறார். அதனைப் பொதுமக்கள் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துகொண்டும், செல்போனில் படம் பிடித்துக்கொண்டு உள்ளனர். அடி தாங்க முடியாமல் பெண் நிலைகுலைந்து போயுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இருவர் மீதும் தாக்குதல் நடத்தியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாஜேமுல் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலா செயலாளர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தாக்கப்படும் ஆணும், பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், கட்டபஞ்சாயத்து அடிப்படையில் இருவருக்கும் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இஸ்லாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாஜேமுல் சோப்ரா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹமிதுர் ரஹ்மானுக்கு நொருக்கமானவர் என்று குற்றம் சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா, “மம்தா தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பெண்களின் சாபக்கேடு. தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.