Skip to main content

“முறைகேட்டை நிரூபித்துவிட்டால் பொது வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறேன்” - பா.ஜ.க முதல்வர்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 BJP Chief Minister says If prove the malpractice, I will quit public life

 

அசாம் முதலமைச்சர் மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள் (வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். மேலும், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

 

இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே வந்த நிலையில், கெளரவ் கோகாய் பதில் அளித்துள்ளார். அதில் அவர், “குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் அங்கு சென்றால் அனைத்து ஆவணங்களும் பொது வெளியில் பகிரங்கப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடமிருந்து எந்தத் தொகையும் பெறவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இதற்கு மாறாக ஆதாரங்களை யாராவது வழங்கினால் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவது உட்பட எந்த தண்டனையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

எண்ண எண்ண குறையாத பணம்; கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.350 கோடி - சிக்கிய காங். எம்.பி

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்த்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இது குறித்து உள்துறை அமைச்சர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய போது, “எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, எம்.பி., வீட்டில் இருந்து, இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது ஆனால் ஒட்டுமொத்த இந்தியக் கூட்டணியும் இந்த ஊழலைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால், ஜேடியு, ஆர்ஜேடி, திமுக, எஸ்பி என அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தங்கள் ஊழலின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்” என்றார்.