Skip to main content

“பா.ஜ.கவின் துரோகத்தால்...” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.பி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Bihar BJP MP who resigned and joined congress

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பா.ஜ.க எம்.பி. ஒருவர் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருபவர் அஜய்குமார் நிஷாத். பா.ஜ.க சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஜய்க்கு இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அஜய் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில், அஜய்குமார் இன்று (02-04-24) தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். 

இது குறித்து, அஜய்குமார் தனது எக்ஸ் தளத்தில், ‘மதிப்பிற்குரிய ஜே.பி.நட்டா, பா.ஜ.க.வின் துரோகத்தால் அதிர்ச்சியடைந்தேன். அதனால், கட்சியின் அனைத்து பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அஜய்குமார், “தூக்கில் போடப்படும் நபருக்கு கூட கடைசி ஆசை என்னவென்று கேட்கப்படும். ஆனால், எனக்கு சீட் கிடையாது என முடிவானதற்கு முன்பு ஒரு முறை கூட அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக நான்கு தொகுதிகளிலும், இரண்டாம் கட்டம் முதல் ஐந்தாம் கட்டம் வரை தலா 5 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக தலா 8 இடங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.  அதே போல், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்