அயோத்தி மாநகராட்சியில் உள்ள வார்டு ஒன்றில் இஸ்லாமிய வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள நிகழ்வு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
அயோத்தியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 27 இடங்களை பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சி 17 வார்டுகளிலும், சுயேச்சைகள் 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். ராம் ஜென்மபூமி கோவில் இயக்கத்தின் முக்கியப் பிரமுகரின் பெயரிடப்பட்ட ராம் அபிராம் தாஸ் வார்டானது அயோத்தி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகிறது. இங்கு உள்ளூர் இஸ்லாமிய இளைஞர் சுல்தான் அன்சாரி உடன் சேர்த்து மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 2,388 வாக்குகளில் சுல்தான் அன்சாரி 42 சதவீத வாக்குகளை, அதாவது 996 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த மற்றொரு சுயேச்சை வேட்பாளர் நாகேந்திர மஞ்சியை 442 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வார்டில் பாஜக மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தது.
பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும் அயோத்தியில் உள்ள வார்டில் இஸ்லாமிய இளைஞர் வெற்றி பெற்றுள்ள நிகழ்வும், அதே வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிகழ்வும் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றி குறித்து சுல்தான் அன்சாரி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அயோத்தியில் இந்து-இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் இரு சமூகத்தினரின் அமைதியான சகவாழ்வுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்து சகோதரர்களிடமிருந்து எந்த பாரபட்சமும் இல்லை. மேலும், அவர்கள் என்னை வேற்று மதத்தை சேர்ந்தவராக நடத்தவில்லை. அவர்கள் எனக்கு ஆதரவளித்து என்னை வெற்றி பெற வைத்தனர்” என்று தெரிவித்தார்.