Skip to main content

"மிகவும் சிரமப்பட்டு நாடு மீண்டுள்ளது" - ஓமிக்ரான் குறித்து பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

ARVIND KEJRIWAL

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

 

இந்தப் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு பயணிகள் வர தடை விதித்துள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மேலும், உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது.

 

இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "புதிய (கரோனா) திரிபால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களை நிறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, நம் நாடு கரோனாவில் இருந்து மீண்டுள்ளது. இந்தப் புதிய திரிபு இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க சாத்தியமான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Insulin for Arvind Kejriwal in jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் அளித்த மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மனு கடந்த 18 ஆம் தேதி (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார். இந்நிலையில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Insulin for Arvind Kejriwal in jail

இது குறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “நாங்கள் கோரிய இன்சுலின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. கடந்த 23 நாட்களாக அவருக்கு இன்சுலின் ஏன் கொடுக்கப்படவில்லை?. டெல்லி திகார் சிறை அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்திரவதை அறையாக மாறியுள்ளது. 24 மணி நேரமும் அவர் பிரதமர் அலுவலகம் மற்றும் துணை நிலை ஆளுநரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.