/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gzdgdfgds.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைநகரான டெல்லியில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டெல்லியில் தங்கியிருக்கும் இம்மக்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவு வசிக்கின்றனர். இந்நிலையில், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை டெல்லியில் பரப்பும் விதமாக 'தமிழ் அகாடெமி' ஒன்றை உருவாக்கியுள்ளது டெல்லி அரசு.
டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ''பன்முகத்தன்மை, ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை. அதைப் பாதுகாப்பது நமது கடமை; தமிழ் வாழ்க!'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி அரசின் திட்டத்திற்கு நன்றி தெரிவித்திருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், "தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவனசெய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கமல்ஹாசனின் பதிவுக்குப் பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "நன்றி கமல்ஹாசன் ஜி. பன்மொழிக்கலாச்சாரம் கொண்ட தில்லியை உருவாக்க எங்களது அரசு கடமைப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)