Skip to main content

“ஒருவேளை என்னுடைய பதவியை ராஜினாமா செய்தால்” - அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Arvind Kejriwal cricticizes Perhaps if I resign my post

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (24-05-24) பேட்டி அளித்தார். அப்போது அவர், “என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்து சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை நரேந்திர மோடி விரும்புகிறார். தேர்தலில் கெஜ்ரிவாலைத் தோற்கடிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் இந்த திட்டத்தை வகுத்துள்ளார். கெஜ்ரிவாலைக் கைது செய்தால், அவரது அரசு கவிழும், அதன் பிறகு தேர்தல் நடத்தி பா.ஜ.க வெற்றி பெறும். இன்று நான் பதவி விலகினால் அவர்களின் அடுத்த இலக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க.ஸ்டாலின். இன்று நான் பதவி விலகினால் நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். 

நான் வருமான வரி மேலாளர் வேலையை விட்டுவிட்டு டெல்லிக்கு வேலை செய்தேன். நான் டெல்லி முதல்வர் பதவியை 49 நாட்களில் ராஜினாமா செய்தேன். ஆனால், இது எனது போராட்டத்தின் ஒரு பகுதி என்பதால் இன்று நான் பதவி விலகவில்லை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரு பொதுநல மனுவையும் தாக்கல் செய்தனர். ஆனால் அவரை (கெஜ்ரிவால்) ராஜினாமா செய்ய வற்புறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 

சிறையிலிருந்து நான் முதலமைச்சராகத் தொடர விரும்பினால் என்னால் முடியும் என்று நீதிமன்றம் கூறியது. எனவே, நான் முதலமைச்சராக இருந்தால், என் கடமையைச் செய்ய, சிறைக்குள் அடிப்படை வசதிகளை நீதிமன்றம் செய்து கொடுக்க வேண்டும். பா.ஜ.க எங்குத் தேர்தலில் தோற்றாலும், பிரதமர் மோடி முதல்வர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் கைது செய்வார். ஆனால், நான் ராஜினாமா செய்துவிட்டு, சிறையிலிருந்து ஆட்சியை நடத்தவில்லை என்றால், பிரதமர் மோடி மற்ற முதல்வர்களைத் தொடத் துணிய மாட்டார்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மகன் செய்த கொலைக்குத் துணை நின்ற குடும்பத்தினர்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The family that supported the son's did illegal in delhi

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலங்கி. இவருக்கும், பூஜா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பூஜாவின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அதில் அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததில் பூஜாவின் கணவரான நீரஜ்ஜுக்கு பெருன் அதிருப்தியை தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பூஜா தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த பூஜா, ரோஹ்டக்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல விரும்பியுள்ளார். ஆனால் அவரது கணவர் நீரஜ் சோலங்கி, குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு காரில் பூஜாவை பின்தொடரும்படி கூறியுள்ளார். நீரஜ் தனது குடும்பத்தினருடன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு முன்சென்றுள்ளார். இதை நம்பி பூஜாவும் தனது சகோதரருடன் நீரஜ்ஜை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

இதனிடையே, நீரஜ் தனது காரை வேறு பாதைக்கு மாற்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நீரஜின் குடும்பத்தினர் புதைத்துள்ளனர். இதற்கிடையே, கார் வேறு பாதைக்கு சென்றவுடன் பூஜாவின் சகோதரர் நீரஜை செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால், அழைப்பு இணைக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த பூஜாவின் சகோதரர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, இரட்டை பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, பூஜா கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும், அந்த உடல்களை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு குடும்பத்தினரே உறுதுணையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.