Skip to main content

#ArrestShehlaRashid ட்ரெண்ட் ஆக காரணம் என்ன..? யார் இந்த ஷீலா ரஷீத்..?

Published on 19/08/2019 | Edited on 20/08/2019

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் ஷீலா ரஷிதை கைது செய்ய வலியுறுத்தி #ArrestShehlaRashid என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

arrest shehla rashid trending in twitter

 

 

இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளை பரப்பியதால் ஷீலா ரஷீத்தை கிரிமினல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்த இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவ தலைவராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். ஜம்மு காஷ்மீர் பிரிக்கபட்டதிற்கு பிறகு காஷ்மீரில் நிலவும் சமீபத்திய சூழல் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட இவரது பதிவுகள் இந்திய ராணுவத்திற்கும், அரசுக்கு எதிராக இருப்பதாக கூறி புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா தாக்கல் செய்த மனுவில், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறார். அவரது ட்வீட்டர் பக்கம் பல ஆயிரக்கணக்கானவர்களால் பின்தொடரப் படுகிறது. இவர் வெளியிட்ட இந்தப் போலிச் செய்திகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை தேச துரோக வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் தற்போது #ArrestShehlaRashid என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவம் பொதுமக்களைத் துன்புறுத்துவதாக இவர் தனது ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே இவர் மீது இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கத் தேர்தல்; அனைத்து இடங்களையும் கைப்பற்றியது இடதுசாரி கூட்டணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Left-wing alliance wins in JNU student union elections

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி  மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜஷே ஜோஷ் வெற்றி பெற்றியிருந்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் சங்கத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 4 பதவிகளையும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தலைவர் தேர்தலில் ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர ஆஜ்மீராவை தோற்கடித்து இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   

கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்டி லால் பாயிர்வா என்ற பட்டியலின மாணவர் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான நிலையில், தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பட்டியலின மாணவர் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) அனைத்து பதவிக்கான போட்டியிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார்.