Skip to main content

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

ுப

 

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான, 'ரிபப்ளிக்' சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, கட்டிட உள்ளரங்கு வடிவமைப்பாளரின் தற்கொலை வழக்கில், சமீபத்தில் கைது செய்தது, ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் காவல்துறை. இந்தக் கைது சம்பவம் தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அர்னாப், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடன் கைது செய்யப்பட்ட நிதிஷ் ஷர்தா, பெரோஸ்சேக் ஆகியோரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்னாப் கோஸ்வாமி எவ்வளவு பணம் கொடுத்தார்..? விசாரணையில் பார்க் முன்னாள் அதிகாரி தகவல்...

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

arnab paid 12000 dollars to barc ex ceo

 

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபட, தனக்குச் செய்த கைமாறுகள் குறித்து பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விசாரணையில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள வாட்சப் உரையாடல் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.பி. முறைகேடு வழக்கில் அர்னாப் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளிவந்த நிலையில், பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடனான அவரது இந்த உரையாடல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பார்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், 3,600 பக்க துணை குற்றப்பத்திரிக்கையை ஜனவரி 11 அன்று மும்பை காவல்துறை பதிவு செய்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, பார்தோ தாஸ்குப்தா மும்பை காவல்துறைக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சுமார் 12, 000 டாலர் பணமும், அதுதவிர டி.ஆர்.பி தகவல்களை மாற்றியமைப்பதற்காக 40 லட்ச ரூபாயும் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

அவரின் வாக்குமூலத்தில், "அர்னாப் கோஸ்வாமியை எனக்கு 2004 முதல் தெரியும். ‘டைம்ஸ் நவ்’ சேனலில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். நான் 2013-ல் பார்க் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தேன். அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக் டிவியை தொடங்கினார். ரிபப்ளிக் டிவியை தொடங்குவதற்கு முன்பே அவர் என்னுடன் அதுகுறித்த திட்டங்களைப் பற்றிப் பேசுவார். மேலும் அவரது சேனலுக்கு நல்ல மதிப்பீடுகளைப் பெற அவருக்கு உதவ வேண்டும் என்பதையும் மறைமுகமாகக் கூறுவார். டிஆர்பி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும் என்று கோஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும். எதிர்காலத்தில் எனக்கு உதவுவதாகவும் அவர் கூறியிருந்தார். 

 

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு நம்பர் 1 மதிப்பீட்டை உறுதிசெய்ய எனது குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். இது 2017 முதல் 2019 வரை நடந்தது. இதற்காக, 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி, லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து, நான் எனது குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து சுற்றுலா செல்வதற்காக 6000 டாலர் பணத்தைக் கொடுத்தார். அதேபோல, 2019 ஆம் ஆண்டு அதே இடத்தில் மீண்டும் என்னைச் சந்தித்த அவர், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் குடும்ப சுற்றுலாவிற்கு 6000 டாலர்களை எனக்குக் கொடுத்தார்.

 

மேலும் 2017 ஆம் ஆண்டில், கோஸ்வாமி என்னைத் தனிப்பட்ட முறையில் ஐடிசி பரேல் ஹோட்டலில் சந்தித்து ரூ .20 லட்சம் ரொக்கத்தைக் கொடுத்தார். அதேபோல, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கோஸ்வாமி என்னை ஐடிசி ஹோட்டல் பரேலில் சந்தித்து ஒவ்வொரு முறையும் ரூ.10 லட்சம் கொடுத்தார்" எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 

Next Story

'நேஷன் வான்ட்ஸ் டு நோ'... அர்னாப்பை துளைக்கும் கேள்விக்கணைகள்..!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

arnab goswami whatsapp leak issue

 

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள வாட்சப் உரையாடல் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்ட்ரா அரசு மற்றும் அர்னாப் கோஸ்வாமி இடையே அண்மைக்காலமாக பல்வேறு உரசல்கள் இருந்துவந்தன. உரசல்கள் விரிசல்களாய் மாறிய பின்பு, பழைய வழக்குகளைத் தூசி தட்டிய தாக்கரே அரசு, சில மாதங்களுக்கு முன்பு அர்னாபை கைதுசெய்தது. அதன்பிறகு, விரிசல்கள் அதிகரித்தன. டி.ஆர்.பி. முறைகேடு வழக்கின் நீட்சியாக பார்தோ தாஸ்குப்தாவின் வாட்சப் உரையாடலைக் கவனித்த மகாராஷ்ட்ர அரசுக்குப் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. டி.ஆர்.பி முறைகேட்டை தோண்டச் சென்ற மகாராஷ்ட்ரா அரசுக்கு ராணுவ ரகசியங்கள் எனும் பெரும்பூதம் அகப்பட்டுள்ளது.

 

புல்வாமா தாக்குதல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, சர்ஜிகல் ஸ்ட்ரைக், நீதிபதியை விலைக்கு வாங்குவது, மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை அத்தனையும் அவர்களால் முன்கூட்டியே பேசப்பட்டிருக்கிறது. 'அர்னாபுக்கு தெரிந்த ரகசியங்கள் இன்னும் யார் யாருக்குத் தெரிந்தது' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை இந்த ரகசியங்கள் அர்னாபுக்கு தெரிந்ததைப் போலவே பாகிஸ்தானுக்கும் தெரிந்திருந்தால் 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' நடத்தச் சென்ற ராணுவ வீரர்களின் கதி என்னவாகியிருக்கும் என எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்வியை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதேபோல, அர்னாப் என்ற பெயருக்குப் பதிலாக, இந்த இடத்தில் வேறு ஏதேனும் ஒரு பெயர் இடம்பெற்றிருந்தால், இந்த விவகாரம் மக்கள் மத்தியிலும், அரசாங்க மட்டத்திலும் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் தவறாமல் யோசிக்கவேண்டியதாகும்.  

 

arnab goswami whatsapp leak issue

 

புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அந்த உரையாடலில், "இந்த வருடத்தின் மிகப்பெரும் தீவிரவாத சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள் நமது சேனல்தான் லீடிங். இதன் மூலம் நமக்குப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது" எனப் பெருமிதப்பட்டுள்ளார் அர்னாப். 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை விட தனது தொலைக்காட்சிக்கு கிடைத்த புகழ் வெளிச்சம், இந்தியாவின் ஒரே தேசப்பற்றாளரான அர்னாபை மகிழச் செய்துள்ளது.

 

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை வெளியான வாட்சப் உரையாடல்கள் அனைத்தும் உண்மை என மும்பை போலீஸ் தெரிவித்ததாக டெல்லியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அர்னாபும் இந்த விவகாரத்தை மறுக்கவில்லை. 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' புகழ் அர்னாப் கோஸ்வாமியிடம் இந்தத் தேசம் பல கேள்விகளை எழுப்பக் காத்திருக்கிறது. அதற்கெல்லாம் அவரிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ, 'சத்யமேவ ஜெயதே, பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த்' போன்ற தேசப்பற்று கிளிஷேக்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இவ்வளவும் ஆதாரங்களோடு வெளியே தெரிந்த பின்பும், 'அர்னாப் சிறந்த தேசப்பற்றாளர்' என ஒரு கும்பல் நம்புகிறது அல்லது பிறரை நம்பவைக்க முயல்கிறது.

 

இவ்வளவு நெருக்கமாக அர்னாபுடன் இருக்கவேண்டிய அவசியம் பார்க் முன்னாள் அதிகாரிக்கு ஏன் வந்தது என உங்களுக்குத் தோன்றலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை தனது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பார்க் அதிகாரி நினைத்துள்ளார். அதற்கு அர்னாப் உதவியுள்ளார். அதேபோல, தனது மகளுக்கு சிறந்த வழக்கறிஞரிடம் 'இன்டர்ன்ஷிப்' கிடைப்பதற்கு உதவுமாறு அர்னாபிடம் சிபாரிசு கேட்டுள்ளார் பார்க் அதிகாரி பார்த்தோ. அதற்கு உதவுவதாக அர்னாப் கூறியுள்ளார். இவ்வாறு பல கைமாறுகளுடன் அந்த வாட்சப் உரையாடல் நீள்கிறது. 

 

" 'சிக்னல்' என ஒரு செயலி உள்ளது. அது மிகவும் பாதுகாப்பானது" என இவர்கள் இருவரும் தங்களது வாட்சப் உரையாடல்களில் பேசியுள்ளனர். அதுவும் லீக் ஆகியுள்ளது. இதைப் பிடித்துக்கொண்டு 'அன்றே சொன்னார் அர்னாப்', 'இந்தியாவின் நாஸ்டர்டாமஸ்' என ஒரு கூட்டம் கிளம்பாமல் இருப்பது சாலச் சிறந்தது!