
புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக தேர்வு குழு அடுத்த வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் 18ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அடுத்த வாரம் கூடுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த தேடுதல் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் பரிந்துரை செய்பவரை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவிட உள்ளார். அதே சமயம் 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிராகத் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 19ஆம் தேதி, நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.