Skip to main content

தனியார் பள்ளியின் அலட்சியம்... கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சிறுவன்...

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

யு.கே.ஜி. படிக்கும் மாணவன் பள்ளியில் இருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

andhra private school issue

 

 

ஓர்வக்கல் பகுதியில் உள்ள திப்பாய்பள்ளியைச் சேர்ந்த புருஷோத்தம் என்ற சிறுவன் விஜயனிகேதன் உயர்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்துள்ளான். நேற்று பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை பெறுவதற்காக சிறுவன் புருஷோத்தம் வரிசையில் நின்றுள்ளான். அப்போது உணவு வாங்கும் அவசரத்தில் அவன் தவறி கொதிக்கும் சாம்பார் வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்திற்குள் விழுந்துள்ளான்.

இதனையடுத்து அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் அந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துளான். குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் இருந்த பள்ளியின் பணியாளர்களின் அலட்சியத்தாலேயே குழந்தை புருஷோத்தம் இறந்துள்ளதாக கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவனின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தந்தை, "நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு குறைபாடுகளால்தான் எனது மகன் இறந்தான். எந்தவித பேரமும் இன்றி எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாயை கல்வி கட்டணமாக செலுத்தினோம். ஆனால் எனது மகனை இப்போது யார் திரும்ப அழைத்து வருவார்கள்? ஒரு சிறுவன் எப்படி சாம்பரில் விழ முடியும்? மதிய உணவு நேரத்தில் யாரும் ஏன் மாணவர்களைக் காக்கவில்லை? இது அலட்சியம் அல்லவா?" என கண்ணீருடன் கதறியது பலரது மனதையும் உருக்கியுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்