Skip to main content

ஃபோன் ஒட்டுக்கேட்பு! அமித்ஷா பதவி விலக வேண்டும் ! - ராகுல் கொந்தளிப்பு !

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Phone tapping! Amitsha must resign! - Rahul

 

‘பெகாசஸ்’, இந்த ஒற்றை வார்த்தைதான் இன்றைக்கு உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் சர்வதேச அளவில் 1,500க்கும் மேற்பட்டவர்களின் ஃபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டதாக அம்பலமாகியிருக்கும் விவகாரங்கள்தான் அதிர்ச்சிக்கு காரணம். இதில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறையினர் என முக்கியஸ்தர்களின் செல்ஃபோன் அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது. 

 

இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் உதவியாளர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபல ஊடகவியலாளர்கள் உள்பட 300 இந்தியர்களின் செல்ஃபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மொபைல் அழைப்புகள் ஒட்டுக்கேட்பதை இந்திய அரசைத் தவிர வேறு எவரும் செய்திருக்க தேவையில்லை என்பதால், மத்திய மோடி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். 

 

இந்தப் பிரச்சனையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் அமளிகள் ஏற்பட்ட நிலையில், பெகாசஸ் குறித்து ஆவேசப்பட்டுள்ள ராகுல் காந்தி, "ஃபோன் ஒட்டுக்கேட்பு மிகப்பெரிய தேசத்துரோகம்" என்று மோடி அரசைக் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

இதுபற்றி பேசிய அவர், "பெகாசஸ் மென்பொருளை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த ஸ்பைவேரை, பயங்கரவாத செயல்களை முறியடிக்க தீவிரவாதிகளின் ஃபோன்களை ஒட்டுக்கேட்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசிகளை மோடியும் அமித்ஷாவும் ஒட்டுக்கேட்டுள்ளனர். அதற்காக பெகாசஸைப் பயன்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்புக்கும் பெகாசஸ் பயன்பட்டுள்ளது; ரஃபேல் தொடர்பான விசாரணையைத் தடுக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய தேசத் துரோகம். இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்குப் பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும். அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும், இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். பெகாசஸ் மென்பொருளை தனிநபர்களோ, ராணுவமோ வாங்க முடியாது. ஒரு நாட்டின் அரசாங்கம்தான் வாங்க முடியும். அதனால், இந்தியாவில் மோடி அரசுக்குத்தான் பெகாசஸைப் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. அதனால், அமித்ஷா பதவி விலக வேண்டும்" என்று ஆவேசப்பட்டுள்ளார் ராகுல் காந்தி.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி எம்.பி. கடிதம்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Rahul Gandhi MP Letter for CM MK Stalin

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு கடிதம் எழுதியிருந்தார். 

Rahul Gandhi MP Letter for CM MK Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி  எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஜூன் 28 ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஜூன் 4. 2024 அன்று நீட் இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். தங்களின் கடிதத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்வாதிகாரத்தை ஒழிக்க மக்கள் விரும்புகின்றனர்” - ராகுல் காந்தி எம்.பி.!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
"People want to end dictatorship" - Rahul Gandhi MP

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன.  அதன்படி 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாகத் துணை நிற்கின்றனர். ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் அரசியலமைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.