Skip to main content

இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து பற்றி பேசிய அமித்ஷா; உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

amit shah speech karnataka state islamic reservation cancel condemn supreme court 

 

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்திருந்தது. மேலும்  அவர்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது.

 

மேலும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

 

அதேசமயம், இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த வழக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மே 9 ஆம் தேதி வரை கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக் கூடாது. மேலும் மே 9 ஆம் தேதி வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சிக்கொடி பகுதியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “பாஜக 4% முஸ்லீம் இட ஒதுக்கீட்டை நீக்கியது மற்றும் லிங்காயத்துகள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை அதிகரித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுகிறது. இது லிங்காயத்துகள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை குறைக்கும். கர்நாடகா இதை விரும்பவில்லை. மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

 

இது தொடர்பான வழக்கு நேற்று (09.05.2023) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் கர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பேசியது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பது போன்று உள்ளது" என வாதிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அது குறித்து யார் பேசினாலும் கருத்து தெரிவித்தாலும் தவறுதான். மேலும் நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.

 

இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், "ஒரு விவகாரம் நீதித்துறையின் முன்பாக நிலுவையில் இருக்கும் போது அரசியல் கட்சியினர் எப்படி இது குறித்து கருத்து கூறமுடியும். இந்த விவகாரத்தில் அரசியல் கலக்கப்படுவதை நீதிமன்றம் விரும்பவில்லை. இதுபோன்ற பகிரங்க அறிக்கைகள் அதிருப்தி அளிக்கிறது. அரசியல்வாதிகள் நீதிமன்றத்தின் புனிதத் தன்மையைக் காக்கும் விதமாக நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

 

அப்போது குறுக்கிட்ட கர்நாடக மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரையில் எவ்விதமான பணி நியமன ஆணைகளும் மேற்கொள்ளப்படாது" என்ற உறுதிமொழியை நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.