அமேசான் மூலம் இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி நிர்வகித்து வருகிறது. தற்போது இவ்வமைப்புடன் அமேசான் நிறுவனமும் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் தளங்களின் மூலம் இனி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக அமேசான் ஆண்ட்ராய்டு செயலியிலும், மொபைல் ஃபோனுக்காக அமேசான் இணையதளத்திலும் இந்த வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐஃபோனுக்கான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வது என அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. அமேசான் பே அல்லது பிற இணையதள பணப்பரிவர்த்தனை முறை மூலம் முன்பதிவுக்கான கட்டணம் செலுத்தும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.