காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அன்றைய தினமே கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நீர் பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், பாஜக மாநில தலைவர் சி.டி.ரவி, நீர்பாசனத்துறை துறை அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.