Akhilesh Yadav calls BJP MLAs in uttar pradesh

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 403 இடங்கள் கொண்ட அம்மாநிலத் தேர்தலில், பா.ஜ.க 255 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில், அதிக தொகுதிகள் கைப்பற்றியிருந்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில், 18வது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அந்த தேர்தலில், அதிகப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகிய கட்சிகளின் உதவியுடன் பிரதமர் மோடி கூட்டணி ஆட்சி அமைத்தார். பா.ஜ.கவின் இந்தத்தோல்வியினால், அக்கட்சி தலைமை பெரும் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படுகிறது.

குறிப்பாக, பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட பா.ஜ.க அதிக இடங்களை பெற்றிருக்கவில்லை. மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதிலும், ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்திருந்தது. பா.ஜ.க பெரிதும் நம்பியிருந்த தொகுதியில் தோல்வியடைந்தது என்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகபார்க்கப்பட்டது.

Advertisment

இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர் கே.பி.மெளரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்தச் சூழலில் தான், கே.பி.மெளரியா கடந்த 16ஆம் தேதி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பரப்பரப்பான சூழ்நிலையில், உ.பி அமைச்சரவையை நேற்று முன் தினம்(17-07-24) யோகி ஆதித்யநாத் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கே.பி.மெளரியா கலந்து கொள்ளவில்லை.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், துணை முதல்வர் மெளரியா தனது எக்ஸ் பக்கத்தில், “அரசை விட கட்சி தான் பெரியது. தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை” எனக் குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க தலைவர்களை சந்தித்த பிறகு, மெளரியா வெளியிட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தப் பதிவின் மூலம் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை நேற்று முன் தினம் இரவு யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Akhilesh Yadav calls BJP MLAs in uttar pradesh

Advertisment

தற்போது, பா.ஜ.கவில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏக்கள் பலர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்தும் முறையை அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “மழைக்காலக் கூட்டத்தொடர் சலுகை: நூறைக் கொண்டு வாருங்கள், ஆட்சி அமைக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது உ.பி அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.