/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/proni.jpg)
ராமாயணம் பற்றியும், மகாபாரதம் பற்றியும் விமர்சனம் செய்ததாக ஆசிரியருக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மங்களூர் அருகே ஜெப்புநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியராக பிரபா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி, மாணவர்களிடம் பாடம் நடத்தும்போது, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை கற்பனைக் கதை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, இது குறித்து அறிந்த இந்து அமைப்பினரும், பா.ஜ.க.வினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர் பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், நேற்று (12-02-24) மீண்டும் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர், இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர் என நூற்றுக்கணக்கானோர் பள்ளியின் வாசல் முன்பு திரண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
மேலும், அவர்கள் மாணவர்களின் மனதில் மதவெறியை விதைக்கும் ஆசிரியர் பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, ஆசிரியர் பிரபாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)