ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியோடு இணைந்த விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விடுதியில் தங்கியிருந்த 7 மாணவர்கள் தங்களது அறையில் மாட்டிறைச்சி சமைத்துள்ளனர். இது தொடர்பாக, விடுதியில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகாராக அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘பல்வேறு சமூகத்தின் அடிப்படையில், அனைத்து மாணவர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த இந்த சம்பவம், அமைதியின்மையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ஒரு பதற்றமான சூழலுக்கு வழிவகுத்தது. எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் மாட்டிறைச்சி சமைத்த மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில், கல்லூரியின் நடத்தை விதிகளை அந்த மாணவர்கள் மீறியதாக கூறி அவர்களுக்கு அபராதம் விதித்து விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் பூதாகரம் ஆகவே, மாட்டிறைச்சி சமைத்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.