Skip to main content

குஜராத் தேர்தலில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் ஆம் ஆத்மி

 
- தெ.சு.கவுதமன்

 

BJP

 

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில்  நடைபெற உள்ளதால், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன. இம்முறை அங்கே பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காங்கிரஸ் தரப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், ராகுல் காந்தி இங்கு பிரச்சாரம் செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் நடைப் பயணத்தில் மட்டுமே தீவிர கவனத்தில் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. ஆம் ஆத்மி தரப்பில் கெஜ்ரிவால் தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளார்.

 

BJP

 

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்தத் தேர்தல் சவாலானதாக இருக்குமா என்று பார்த்தால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. கடந்த சில தேர்தல்களில் பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்றிருந்த களத்தில் இம்முறை ஆம் ஆத்மி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.க. 49% வாக்குகளையும், காங்கிரஸ் 41% வாக்குகளையும் பெற்றிருந்தது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடைந்திருக்கிறது. அதேவேளை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் காங்கிரஸை வாஸ் அவுட் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை, தற்போது குஜராத் வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் என்ற நிலை மாறி, தற்போது பா.ஜ.க.வுக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைத்தான் பெருமளவு பாதிக்கிறது.

 

BJP

 

கொள்கை ரீதியாகப் பார்க்கும்போதும், பா.ஜ.க. தன்னை இந்துத்துவா கட்சியாகக் காட்டிக்கொள்வதுபோல் ஆம் ஆத்மியும் தன்னை இந்துத்துவா கட்சியாகத்தான் முன்னிறுத்துகிறது. அதேவேளை, பண மதிப்பிழப்பு, பொருளாதாரச்சரிவு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பும் வாக்காளர்களை மொத்தமாக ஆம் ஆத்மி அறுவடை செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆம் ஆத்மி பெற்று வருகிறது.

 

குஜராத்தில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள் தொகை 20% என்ற அளவில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 40% ஆக உள்ளது. இவர்களைக் குறிவைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளார். பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை கெஜ்ரிவால் வைத்து வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக இம்மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்தும், இன்னும் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமங்கள் அதிகமிருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக 800 கோடி ரூபாய்க்கு விலை பேசியதையும் சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார். அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

BJP

 

பா.ஜ.க.வோ தனது பிரச்சாரத்தில் ஆம் ஆத்மியைவிட காங்கிரசைத்தான் வழக்கம்போல் டார்கெட் செய்து வருகிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க.வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் 20% அளவுக்கு ஆம் ஆத்மி பாதிப்பை ஏற்படுத்துமென்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கே அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்டத்தில் பா.ஜ.க.வை எதிர்க்கும் ஆம் ஆத்மி, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியிலும் சேதத்தை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆம் ஆத்மி எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கப்போகிறது. எந்தெந்த கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே குஜராத் தேர்தல் முடிவுகள் இருக்குமென்று தெரிகிறது. குஜராத் தேர்தல் முடிவில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி இரண்டாமிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக, ஆம் ஆத்மியால் காங்கிரசுக்குத்தான் பெரிய ஆப்பு என்பது உறுதியாகியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !