Skip to main content

குஜராத்தில் ஆம் ஆத்மி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! 

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

arvind kejriwal

 

2022ஆம் ஆண்டு குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால், அதனை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கிவிட்டன. அதேசமயம் தேர்தலையொட்டி சில கட்சிகளுக்குள் உட்கட்சி பூசல்களும் வெடித்துள்ளன.

 

இதற்கிடையே குஜராத்தில் இன்று (14.06.2021) ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தைத் திறந்துவைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

 

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், "குஜராத்தில் உள்ள மக்கள், டெல்லியில் மின்சாரம் இலவசமென்றால் ஏன் இங்கேயும் இலவசமாக இருக்க கூடாது என நினைக்கிறார்கள். அதேபோல் கடந்த 70 ஆண்டுகளாக மருத்துவமனைகளின் நிலை முன்னேறவில்லை. ஆனால் தற்போது அனைத்து விஷயங்களும் மாறும்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.