Skip to main content

சோனியா காந்தியின் தனிச்செயலாளர் மீது பாலியல் வழக்குப் பதிவு

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

71 year old personal secretary of Sonia Gandhi booked on rape charges

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பி.பி.மாதவன் பணியாற்றிவருகிறார். அவருக்கு வயது 71. இவர் மீது டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதை வெளியில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து, பி.பி.மாதவன் மீது பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் டெல்லி உத்தம்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம்பெண் அளித்துள்ள இந்தப் புகார் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் விளக்கம் அளித்த பி.பி.மாதவன், இது காங்கிரஸ் கட்சியின் புகழைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Former Prime Minister Manmohan Singh retires

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.