Skip to main content

7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
7 state by-election setback for the BJP alliance

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்தை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோன்று இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் 1 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் வகிக்கிறது. ஆனால், 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்