Skip to main content

25 வயதில் எம்.பி; இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இளம்பெண்கள்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
3 young women MPs at the age of 25 in India

7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக அரசுக்கு மிகப்பெரிய சறுக்கலைக் கொடுத்துள்ளது. பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கூட்டணிக் கட்சிகளான நிதீஷ், சந்திரபாபு தயவில் ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடிக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது.

இந்த நிலையில், நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் மிகக்குறைந்த வயதில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 25 வயதில் அவர்கள் மூவரும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியலில் இளம் தலைமுறையினரை உத்வேகப்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 25 வயதான சாம்பவி சவுத்ரி என்ற இளம் பெண் பீகார் லோக்சபா தேர்தலில் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டார். NDA கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் காங்கிரஸ் வேட்பாளரை ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவின் இளம் எம்.பி. என்ற அந்தஸ்தை சாம்பவி சவுத்ரி பெற்றுள்ளார். 3 - வது தலைமுறை அரசியல்வாதியான சாம்பவி சவுத்ரியின் தாத்தா மஹாவீர் சவுத்ரி. இவர், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தவர். அதன்பின் அவரின் தந்தை அசோக் சவுத்ரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தவர். தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.

பீகாரில் இளம் வயதில் மக்களவையில் நுழையும் தகுதி பெற்ற சாம்பவி சவுத்ரி டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் சோசியாலஜி துறையில் பட்டம் பெற்றவர். இந்த வெற்றிக்குப் பின் சாம்பவி சவுத்ரி பேசுகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். சாம்பவி சவுத்ரிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆச்சரியா கிஷோர் குணாலின் மகன் சயன் குணாலுடன் திருமணம் முடிந்துள்ளது. தேர்தல் பரப்புரைக்கு மோடி பீகார் வந்தபோது சாம்பவி சவுத்ரியை குறைந்த வயதில் அரசியலுக்கு வந்தவர் என்று வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதுபோல ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டவர் சஞ்சனா ஜாதவ். இவருக்கும் 25 வயதே ஆகிறது. இருப்பினும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். முன்னதாக இவர் 2023 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இருப்பினும் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். இப்போது கிடைத்த வெற்றியின் மூலம் 25 வயதில் ராஜஸ்தானிலிருந்து மக்களவைத் தேர்தலுக்குச் செல்லும் பெருமையை சஞ்சனா ஜாதவ் பெற்றுள்ளார்

சாம்பவி சவுத்ரி, சஞ்சனா ஜாதவ் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தின் மச்லிசார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டவர் பிரியா சரோஜ். 25 வயதான இவர் 35 ஆயிரத்து 850 வாக்குகள் வித்தியாசத்தில் சிட்டிங் எம்.பி. போலாநாத்தை தோற்கடித்தார். இவர் 3 முறை எம்பியாக இருந்த தூஃபானி சரோஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, 18 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 25 வயதான பிரியா சரோஜ், சாம்பவி சவுத்ரி மற்றும் சஞ்சனா ஆகிய 3 பெண் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

சார்ந்த செய்திகள்