
கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார்.
இந்த மாநிலத்தில் அண்மை காலமாக பெண்களை வைத்து பணம் பறிக்கும் முயற்சியான ஹனி டிராப் என்ற செயல் அதிகரித்து வருகிறது. இந்த செயலில், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், நேற்று பேசிய கூட்டறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா, கர்நாடகாவில் 48 எம்.எல்.ஏக்கள் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாவும், தன்னையும் சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருந்தார். இந்த ஹனி டிராப்பில் சிக்கிய 48 எம்.எல்.ஏக்களின் முக்கிய விஷயங்கள் அடங்கிய பென் டிரைவும், சிடியும் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது பேச்சு மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று (21-03-25) காலை கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதத்தில் முதல்வர் சித்தராமையா பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏக்களை சிக்க வைக்கும் ஹனி டிராப் வழக்கு குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் விளக்கம் கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாகக் கூறிய சித்தராமையாவின் விளக்கத்தை ஏற்காத பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சித்தராமையாவின் காங்கிரஸ் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் காகிதங்களை கிழித்து சபாநாயகர் யூ.டி.காதர் மீது வீசினர். இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும், பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததை அடுத்து சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். இதையடுத்து, மீண்டும் அவை தொடங்கியபோது, காகிதங்களை கிழித்து வீசி அவையில் ஒழுங்கினமாக செயல்பட்ட 18 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார். மேலும், அவர்கள் 6 மாதம் காலம் வரை அவைக்கு வரத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தாங்களாகவே, அவையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் தெரிவித்தபோது, யாரும் அவையில் இருந்து வெளியேறாமல் இருந்துள்ளனர். இதனால், அவை பாதுகாவலர்கள் மூலம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 18 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.