Skip to main content

வகுப்பறை பிரச்சனை: 10 ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சக மாணவன்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

up

 

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம் ஷிகார்பூரில், 10ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களிடையே அமருமிடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அமர வைத்துள்ளார்.

 

இருப்பினும் ஆத்திரம் அடங்காத ஒரு மாணவன், துப்பாக்கியை எடுத்துவந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்ட மாணவனை மூன்றுமுறை சுட்டுள்ளான். இதில் அந்த மாணவனின் தலை, நெஞ்சு மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிரிழந்தான். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே அங்கிருந்து ஓட முயல, அப்பள்ளியின் ஆசிரியர்கள் அவனை மடக்கிப் பிடித்து, துப்பாக்கியைப் பிடுங்கியதோடு போலீஸாரிடமும் ஒப்படைத்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீஸார், "துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் தனது (ராணுவத்தில் பணியாற்றும்) மாமாவின் துப்பாக்கியை எடுத்துவந்து, சக மாணவனை சுட்டதாகவும், அந்த மாணவனின் பையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

 

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மாணவன் பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வகுப்பறையில் அமரும் இடம் தொடர்பான பிரச்சனையில், 10 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை சுட்டுக் கொன்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.