Skip to main content

இந்திய ஒற்றுமை பயணத்தின் 100 ஆவது நாள்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

100th day of bharath jodo yatra

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து இந்த யாத்திரையைத் தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல்காந்தி, இன்று 100 ஆவது நாளாக நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் பா.ஜ.க. பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள். வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுவது குறித்தும், வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்தும், அதிகாரக் குவியலைக் கண்டித்தும் கேள்விக் கணைகளை தலைவர் ராகுல் காந்தி எழுப்பினார்.

 

இந்தக் கேள்விக் கணைகள் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தது. மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப். 7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.

 

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள்  நிகழ்வுக்கு, டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளினை தமிழகத்திலுள்ள கட்சி அளவிலான அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

இந்த நிகழ்வுகளின் மூலம் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்